நிலவில் நான்

நிலவில் நான்

கதை – சாயி சஞ்சனா நரேஷ்கயல் அறிவியல் வகுப்பில் மிகவும் உற்சாகமாக இருந்தாள்! ஆசிரியர் நிலவைப்பற்றி நிறைய தகவல்களை சொல்லிக்கொண்டிருந்தார். “நிலவு, பூமியின் இயற்கையான துணைக்கோள் என்பது உங்களுக்குத் தெரியுமா? நிலவின் ஈர்ப்பு பூமியைவிட ஆறு மடங்கு குறைவு, எனவே நாம் நிலவுக்குச் சென்றால் எடை குறைவாக உணர்வோம் ! அதுமட்டுமில்லை நாம் நிலவில் சீராக நடக்க முடியாது. குதித்தும், தாவியும்தான் செல்லமுடியும்! ” “தவளை போலவா ஐயா!” என்று கயல் வியப்புடன் கேட்டதும்,ஆசிரியர் சிரித்துவிட்டார். “மனிதர்கள் நிலவில் தவளை போல் குதித்தால்,தவளைகள் நிலவில் எவ்வளவு தூரம் குதிக்கும்…” கயலின் கற்பனையில் தவளைகள் அங்கும் இங்கும் தாவிக்கொண்டிருந்தன! “நிலவில் நிறைய மலைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. நிலவு பகல் நேரத்தில் மிகவும் வெப்பமாகவும், இரவு நேரத்தில் மிகவும் குளிராகவும் இருக்கும்.நிலவில் கால் பதித்த முதல் மனிதர், அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங் ஆவார். 1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 11 விண்கலத்தில் இவர் நிலவுக்குச் சென்றார்” என்று ஆசிரியர் நிலவைப்பற்றி சொல்லச்சொல்ல கயலுக்கு நிலவுக்குச் செல்ல வேண்டும் என்று மிகுந்த ஆவல் ஏற்பட்டது! கயல் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்ததும் ,”அம்மா,இன்று நான் நிலவைப்பற்றி நிறைய தெரிந்துகொண்டேன்! ” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள். ” அப்படியா கயல், நீ சின்னக்குழந்தையாக இருக்கும் பொழுது,நிலவைக் காட்டினால் கைகொட்டி அழகாக சிரிப்பாய் ” என்று அம்மா பரவசத்துடன் நினைவுகூர்ந்தார் . “நிலவில் கால் பதிக்க எனக்குக் கொள்ளை ஆசை” என்று கயலின் அண்ணன் கதிர் வேகமாகச் சொன்னான்.” கதிருக்கு நிலவில் என்ன வேலை” என்று சாமர்த்தியமாக கயல் சொன்னதும் அனைவரும் சிரித்தனர். “ஏதாவது அதிசயம் நடந்தால்தான் நாம் நிலவுக்குச் செல்ல முடியும் ” என்று ஏக்கத்துடன் கயல் சொன்னாள். “முயன்றால் முடியும் கயல் ” என்று அம்மா ஊக்கமளித்தார் . “கயல் என்னிடம் நிலவைப்பற்றி ஒரு புத்தகம் இருக்கிறது. வா படிக்கலாம் ” என்று கதிர் கூறியதும், கயல் முகமலர்ந்தாள். மேலும் நிலவைப்பற்றி பல தகவல்களை இணையதளங்களில் தேடித்தேடி இருவரும் படித்தனர். “கதிர்,நிலவில் எந்தச் சத்தமும் கேட்காது என்பது உனக்குத் தெரியுமா?” என்று கயல் சொன்னது கதிருக்கு ஆச்சரியமாக இருந்தது. “எப்படியாவது நிலவுக்குச் செல்லவேண்டும் கதிர்!” என்று கயல் உறுதியுடன் கூறினாள். கயலின் கனவு பலிக்குமா?“கயல்,கதிர்,இரவு உணவு தயார்,சாப்பிட வாருங்கள்!” என்று அம்மா அழைத்தார். அதே சமயம் அப்பாவும் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பினார். “என்ன இது,வீடு மிகவும் அமைதியாக இருக்கிறதே, பிள்ளைகள் எங்கே?அவர்களிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொல்லவேண்டும்!”என்று அப்பா பரபரப்புடன் கேட்டார். அப்பாவின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த வீட்டின் செல்லப்பிராணியான வீரன், ஓடிவந்து அவர் முன்னே நின்று வாலாட்டியது. “வீரன், “உள்ளேன் ஐயா” என்று சொல்லிவிட்டான், கயலும்,கதிரும் அப்படி என்ன வேலையாக இருக்கிறார்கள் ?” என்று அப்பா கேட்டார். “நிலவைப்பற்றிய புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தோம் அப்பா” என்று சொல்லிக்கொண்டே இருவரும் வந்தனர். “நிலவில் இதுவரை பன்னிரண்டு அமெரிக்கர்கள் கால் பதித்துள்ளனர் அப்பா! நிலவில் கால் பதிக்கும் முதல் இந்தியராக நான் இருக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது !” என்று கயல் ஆர்வமாகச் சொன்னாள். “அப்படியா கயல்! புத்தகத்தில் பார்த்த நிலாவை நேரில் பார்க்க நமக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது!” என்று அப்பா சொன்னதும் அனைவரின் புருவங்களும் வியப்பில் உயர்ந்தன!“நிலவை நேரில் பார்ப்பதா! என்ன ஒரு கற்பனை! “என்று அம்மா ஆச்சரியத்துடன் சொன்னார். “உண்மைதான்,கற்பனைக்கு எல்லையே இல்லை! நாசா விண்வெளி மையம் நடத்திய போட்டியில், நான் முதல் பரிசு பெற்றுள்ளேன். பரிசு என்ன தெரியுமா?” என்று அப்பா புதிர்போட்டார். ” என்ன பரிசு அப்பா?” என்று கதிர் ஆவலுடன் கேட்டான்.  “பிள்ளைகளின் கோடை விடுமுறையில்,குடும்பத்துடன் நிலவுக்குச் செல்ல ஒரு வாய்ப்பு !” என்று அப்பா சொன்னதும், கயல் வியப்பில் கண்களை அகல விரித்தாள்! “என்ன! நிலவுக்குச் செல்கிறோமா! இது உண்மையா?” என்று அம்மா சந்தேகத்துடன் கேட்டார். அப்பா சில தாள்களை அம்மாவிடம் காண்பித்தார். ” இவை ,நிலவுக்குச் செல்வதற்கான பயணச்சீட்டுகள்!” என்று அப்பா சொன்னதும், அம்மா மலைத்துப்போனார்! “போட்டியில் மகத்தான வெற்றி பெற்றதற்கு என் வாழ்த்துக்கள் ! ” என்று அம்மா மிகவும் குதூகலமாகச் சொன்னார். “அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையத்திற்கு நாம் செல்லவேண்டும் . அங்கு சில பயிற்சிகளைப் பெற்ற பின்னர் நாம் நிலவுக்குச் செல்லலாம்.” என்று அப்பா சொன்னதும், “நிலவில் நானா” என்று கயல்  ஆனந்தமாய்க் கூக்குரலிட்டாள்!கோடை விடுமுறை தொடங்கியதும்,கயலின் குடும்பம் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்திலுள்ள நாசா விண்வெளி மையத்திற்கு, தனி விமானம் மூலம் பயணம் செய்தனர். வீரனும் அவர்களுடன் சென்றான் ! பயணத்தின்போது நாசாவில் பணிபுரியும் விண்வெளிவீரரான ராபர்ட் வில்லியம்சன் என்பவர் நாசாவைப்பற்றி பல முக்கியமான தகவல்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார். “நிலவுக்குச் செல்வதற்கான பயிற்சிகளை முதலில் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். பயிற்சிக்காலத்தில், விண்வெளி உடைகளை எப்படி அணிவது, நிலவில் எப்படி நடப்பது, விண்வெளி வாகனத்தை எப்படி ஓட்டுவது, ராக்கெட்டின் உள் அமைப்பு மற்றும் இயக்கம் முதலிய விவரங்களைப்பற்றி அறிந்துகொள்வீர்கள். ஒரு மாத பயிற்சிக்குப் பின்னர் நிலவுக்குச் செல்லலாம். உங்களுடன் நானும் வருவேன்” என்று ராபர்ட் உற்சாகத்துடன் சொன்னார். “நிலவுக்குச் செல்ல எத்தனை நாட்களாகும் ?” என்று கயல் ஆர்வத்துடன் கேட்டாள். “பூமியிலிருந்து நிலவுக்குச் செல்ல மூன்று நாட்களாகும்.” என்று ராபர்ட் சொன்னார். “மூனுக்குச் செல்ல மூன்று நாட்கள் !” என்று கதிர் சொன்னதும் அனைவரும்  சிரித்தனர்.படர்ந்து விரிந்த அட்லாண்டிக் பெருங்கடலின் அருகே அமைந்துள்ள நாசா விண்வெளி மையத்தில் பணிபுரியும் சிலர், கயலின் குடும்பத்தை அன்புடன் வரவேற்று, பேருந்தில் மையத்தை முழுவதும் சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்தனர். பல வகையான ராக்கெட்டுகள், விண்வெளி வீரர்கள் உபயோகப்படுத்திய உடைகள் மற்றும் பொருட்கள், விண்வெளிக்குச் சென்ற ராக்கெட்டுகளைப் பற்றிய காணொளிகள் , முதன்முதலில் நிலவுக்குச் சென்ற அப்பல்லோ 11 என்னும் ராக்கெட்டின் ஏவுதளம், நிலவில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் விண்வெளியைப் பற்றி பல தகவல்களை அவர்கள் கண்டும் ,கேட்டும் தெரிந்து கொண்டனர்! அவர்களுடன் சென்ற ராபர்ட், “இப்பொழுது , உங்களுக்கு ஒரு அதிசயத்தைக் காட்டப்போகிறேன்!” என்று சொன்னார்.” என்ன அதிசயம்? , பூமியில் நிலவைக் காட்டப்போகிறீர்களா?” என்று கதிர் விளையாட்டாகச் சொன்னான். “கிட்டத்தட்ட அப்படித்தான் ! இதோ, நிலவிலிருந்து கொண்டுவரப்பட்ட நிலவுக்கல்” என்று ராபர்ட் ஒரு கறுப்பு நிறக்கல்லை அவர்களிடம்  காட்டினார்! “இதை நீங்கள் தொட்டுப்பார்க்கலாம்!” என்று ராபர்ட் சொன்னதும் கயலும்,கதிரும் பரவசத்துடன் அந்தக் கல்லைத் தொட்டுப்பார்த்தனர்!நாசா விண்வெளி மையத்தின் பயிற்சிக்கூடங்களை கயலின் குடும்பத்தினருக்கு ராபர்ட் சுற்றிக்காட்டினார். “நாளை காலை ஏழு மணிக்கு இங்கே வந்துவிடுங்கள். பயிற்சிகளை மேற்கொள்ள தயாராக இருங்கள்! வீரனுக்கும் பயிற்சிகள் உண்டு !” என்று ராபர்ட் சொன்னதும், அனைவரது முகத்திலும் புன்னகை மலர்ந்தது. மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் பயிற்சிக்கூடம் பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்தது. முதலில் அனைவருக்கும் சில மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.அதன்பின்னர்,விண்வெளி உடைகளை அனைவரும் பெருமையுடன் அணிந்துகொண்டனர்! வீரனுக்கும் ஒரு தனி உடை கொடுக்கப்பட்டது! “நிலவின் ஈர்ப்பு பூமியைவிடக் குறைவாக இருப்பதால் நாம் அதில் நடக்க சிரம்ப்படுவோம். அதற்குப் பழகிக்கொள்ள ஒரு நவீனரக விமானத்தில் நாம் கிட்டத்தட்ட  முப்பது வினாடிகள் குறைந்த ஈர்ப்பு நிலையில் இருக்கவேண்டும்” என்று ராபர்ட் சொன்னார். அந்தப் பயிற்சியின்போது கயலுக்கு வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போல் இருந்தது! வீரன் நிலைகொள்ளாமல் தவித்தான்! கதிர் மட்டும் சிரித்துக்கொண்டே அங்கும் இங்கும் குதித்துக்கொண்டிருந்தான்! நிலவில் வாகனங்கள் இயக்கும் பயிற்சி அப்பாவுக்கு மிகவும் பிடித்திருந்தது ! பயிற்சிக்காலத்தில் ராக்கெட் அமைப்பு மற்றும் இயக்கம் ஆகியவற்றையும் தெரிந்துகொண்டனர்.ஒரு மாத பயிற்சிகள் முடிந்து, நிலவுக்குச் செல்ல கயலின் குடும்பத்தினர் முழுத்தகுதி பெற்றனர்! அவர்களை நிலவுக்கு அழைத்துச் செல்ல “லூனா-21” என்று பெயரிடப்பட்ட ஒரு அதிநவீன விண்கலம் தயாராக இருந்தது. “நாளை மறுநாள் நம் நிலவுப்பயணம் தொடங்குகிறது! அதிகாலை மூன்று மணியளவில் நாம் ஏவுதளத்தில் இருக்கவேண்டும். விண்கலம் சுமார் நான்கு மணிக்கு விண்ணில் ஏவப்படும். நிலவுப்பயணத்திற்கு தயாராக இருங்கள்!” என்று ராபர்ட் சொன்னதும், கயலும்,கதிரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்! மேலும் ராபர்ட் சில முக்கியமான ஆவணங்களை அம்மாவிடம் கொடுத்தார். “இதில் ராக்கெட்டின் அமைப்பு,இயக்கம் மற்றும் நம் பயணம் குறித்த தகவல்கள் அடங்கியிருக்கிறது. அனைவரும் இதைப் படிக்கவேண்டும்” என்று ராபர்ட் கண்டிப்புடன் சொன்னார். “விடுமுறை நாட்களிலும் படிப்பா! வீரன் மட்டும் படிக்காமல் எந்நேரமும் விளையாடுவான்! நானும் நாயாகப் பிறந்திருக்கலாம்!” என்று கதிர் அலுத்துக்கொண்டான். “கதிர் இது பரீட்சைக்கான படிப்பல்ல, நம் பாதுகாப்பிற்கான படிப்பு” என்று ராபர்ட் அக்கறையுடன் சொன்னார். கயல் அதை ஆமோதிப்பது போல் வேகமாக தலையசைத்தாள்!கயலின் குடும்பத்தினர் அன்று அதிகாலையிலேயே பரபரப்பாக காணப்பட்டனர்! “நிலா,நிலா ஓடி வா” என்று கயல் குதூகலமாகப் பாடிக்கொண்டிருந்தாள்! “கயல், நிலா ஓடிவராது,நாம்தான் ஓடவேண்டும்! இன்று நாம் நிலவுக்குச் செல்லும் நாளல்லவா! சீக்கிரம் கிளம்பு!” என்று அம்மா அவசரப்படுத்தினார். “லூனா-21” நிலவுக்குச் செல்ல ஏவுதளத்தில் தயாராக இருந்தது !கயல்,கதிர்,அம்மா,அப்பா,ராபர்ட் மற்றும் வீரன்,விண்வெளி உடைகள் அணிந்து மிகவும் உற்சாகமாக ஏவுதளத்திற்குச் சென்றனர். விண்கலத்தில் அனைவரும் அமர்ந்து, இருக்கைப்பட்டையை அணிந்துகொண்டனர். வீரன், தொடர்பயிற்சிகளின் காரணமாக, இருக்கையில் அமைதியாக அமர்ந்து கொண்டான்.நாசா விண்வெளி மையத்தில், விஞ்ஞானிகளும், ராக்கெட் வல்லுனர்களும் மிகவும் கவனமாக விண்கலத்தின் இயக்கத்தை கண்காணித்துக்கொண்டிருந்தனர்! அதிகாலை நான்கு மணியளவில், “ராக்கெட் புறப்பட இன்னும் பத்து வினாடிகள்தான் இருக்கிறது” என்ற அறிவிப்பைக் கேட்டதும், கயலுக்கு சிறு உதறல் ஏற்பட்டது! மற்றவர்களும் பதட்டத்துடன் இருப்பதை கயல் கவனித்தாள். கட்டுப்பாட்டு அறையில் இருந்து “10..9..8..7..6..5..4..3..2..1.. ப்ளாஸ்ட் ஆப்” என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, “லூனா-21” விண்வெளியை நோக்கி சீறிப்பாய்ந்தது!மூன்று நாட்கள் கழித்து, “லூனா-21” நிலவில் பத்திரமாக தரையிறங்கியது ! “அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! நாம் வெற்றிகரமாக நிலவை அடைந்துவிட்டோம்! ” என்று ராபர்ட் மகிழ்ச்சியுடன் சொன்னார். கயலுக்கு பேரானந்தமாய் இருந்தது! “நிலவில் என் கால்தடங்களையும் பதிக்கலாம் !” என்று கதிர் குதூகலமாகச் சொன்னான். “ஆமாம் கதிர். நாம் இப்பொழுது நிலவில் கால் பதிக்கப் போகிறோம்! வாருங்கள் செல்லலாம் !” என்று ராபர்ட் சொன்னதும் கயலுக்கு உற்சாகம் மேலோங்கியது! முதலில் ராபர்ட் நிலவில் கால் வைத்தார்.அதன்பின்னர் கயல் ,கதிர்,அம்மா,அப்பா மற்றும் வீரன் ஆர்வத்துடன் கால் பதித்தனர் ! “நிலவில் காற்று இல்லை! எனவே நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கின் கால் தடங்கள் இன்றும் அழியாமல் நிலவில் இருக்கின்றன !” என்று ராபர்ட் சொன்னது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது! “ராபர்ட் ஐயா,என்னிடம் இந்தியாவின் தேசியக்கொடி உள்ளது. அதை நிலவில் நிறுத்திவைக்கலாமா?” என்று கயல் தயக்கத்துடன் கேட்டாள். “அப்படியா! என்னிடம் அமெரிக்காவின் தேசியக்கொடி உள்ளது. இரண்டு கொடிகளையும் அருகருகே நிறுத்திவைக்கலாம் !” என்று ராபர்ட் உறுதியுடன் சொன்னார். இரண்டு கொடிகளையும் நிறுத்திவைத்து அனைவரும் வணங்கினர்!நிலவில் எடை குறைவாக இருப்பதுபோல் அனைவரும் உணர்ந்தனர். சீராக நடக்கமுடியாமல் தாவித்தாவி நடப்பது வேடிக்கையாக இருந்தபடியால், அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்! வீரன் பூரிப்புடன் குதித்து விளையாடினான்! “இப்பொழுது நாம் நிலவுக் கற்களை சேகரிக்கலாம். நிலவைப் பற்றிய ஆராய்ச்சிகளுக்கு இந்தக் கற்கள் பயன்படும் ” என்று ராபர்ட் சொன்னார். கயலும்,கதிரும் நிறைய கற்களை சேகரித்து,ஒரு பையில் பத்திரப்படுத்தினர். வானத்தில், பச்சையும்,நீலமும் கலந்த உருண்டை ஒன்றை கயல் திகைப்புடன் கவனித்தாள்! “கயல், அது என்ன என்று சொல் பார்ப்போம்!” என்று அப்பா கேட்டார். “அது நம் பூமி அப்பா!” என்று கயலை யோசிக்க விடாமல் கதிர் அவசரமாக பதிலளித்தான்! கயலுக்கு பூமியை நிலவிலிருந்து பார்ப்பது பரவசமான அனுபவமாக இருந்தது! “வாருங்கள்! எல்லோரும் சிறிது நேரம் நிலவை இந்த வாகனத்தில் சுற்றி வருவோம்!” என்று ராபர்ட் அழைத்து ஒரு சிறிய வாகனத்தைக் காட்டினார். அனைவரும் அந்த வாகனத்திலமர்ந்து நிலவைச் சுற்றி வந்தனர். நிலவில் உள்ள மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளை பார்வையிட்டனர். சுற்றுப்பயணத்தின் போது அம்மா, “கயல்! கயல்!” என்று அலறுவதைப்போல் கயலுக்கு கேட்டது! திகைப்புடன் குரல் வந்த திசை நோக்கி கயல் திரும்பிப்பார்த்தாள்!குரல் வந்த திசையில் அம்மா குழப்பத்துடன்  நிற்பதைப் பார்த்த கயல் திடுக்கிட்டு எழுந்தாள்! “நிலவு,ராக்கெட்,விண்வெளிப் பயணம் என்று ஏதேதோ தூக்கத்தில் உளறிக்கொண்டிருந்தாய் கயல்! கனவில் நிலவுக்குச் சென்றாயா?” என்று கதிர் புன்னகையுடன் கேட்டான். “ஆமாம் அண்ணா! நாம் அனைவரும் கோடை விடுமுறைக்கு நிலவுக்குச் செல்வதைப் போல் கனவு கண்டேன்! ஆனால் ,அது வெறும் கனவுதான் என்பதை நினைக்கும் போது ஏமாற்றமாக இருக்கிறது!” என்று கயல் வருத்தத்துடன் சொன்னாள். “கவலைப்படாதே கயல்! “கனவு மெய்ப்பட வேண்டும் ” என்று பாரதியார் சொன்னதைப் போல், உன் கனவு நிறைவேறும் நாள் வரும்! அதற்காக நீ நிறைய உழைக்கவேண்டும்!”என்று அப்பா ஊக்கமளித்தார். ” முயன்றால் முடியும் என்று அம்மா அடிக்கடி சொல்வார்கள். அது என் மனதில் ஆழப்பதிந்துவிட்டது அப்பா! நான் நிச்சயம் என் கனவை நினைவாக்க கடினமாக உழைப்பேன். கல்பனா சாவ்லா,சுனிதா வில்லியம்ஸ் போன்ற விண்வெளி வீராங்கனைகள் போல் நானும் விண்வெளிக்குச் செல்வேன் ! நிலவில் நான் கால் வைப்பேன்! ” என்று உறுதியோடு கயல் சொன்னாள். ” நல்லது கயல். நீ நிலவில் பிறகு கால் வைக்கலாம் ! முதலில் கட்டிலில் இருந்து காலை கீழே வை! பள்ளிக்கு நேரமாகிறது!” என்று கதிர் சொன்னதும் அனைவரும் கலகலவென்று சிரித்தனர்!

முற்றும்
Click to Read an Interactive version of this story here