எங்கே என் தூக்கணாங்குருவி

 எங்கே என் தூக்கணாங்குருவி

சாலையின் இரண்டு பக்கங்களிலும் பறவைகளும் அதன் கூடுகளும் மரங்களை அலங்கரித்து கொண்டிருந்தது .பள்ளிக்கு சிறுவர்கள் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தார்கள் .அப்பொழுது ஒரு சிறுவன் மட்டும் யாரோ தன்  பின்னால் வந்து கொண்டிருப்பதை கவனித்தான்.திரும்பி பார்த்தால் அது ஒரு பறவை.ஆச்சரியத்தோடு நீ எதற்காக என் பின்னே வருகிறாய் என்று கேட்டான் .நான் இங்கே இருக்கும் மரத்தில் வாழ்கிறேன் நான் உன் நண்பனாக ஆசைப்படுகிறேன் என்றது. ஓ தாராளமாக!என் பெயர் கிருஷ்ணா.நான் உன்னை மணி என்று கூப்பிடுகிறேன்.பள்ளி முடிந்ததும் நாம் இருவரும் விளையாடலாம்.அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களானார்கள்.

சில நாட்களுக்கு பிறகு எப்பொழுதும் போல் கிருஷ்ணா பள்ளிக்கு  சென்று  கொண்டிருந்தான் அப்பொழுது அங்கு நடந்ததை பார்த்து  அவன்  கண்ணீரோடும் வருத்ததுடனும் பள்ளிக்கு சென்றான். மாலை வீடு திரும்பும்போது வழியில் தன் நண்பனை பார்த்ததும் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறான்.

பிறகு மணி, நாங்கள் இருந்த மரங்களை வெட்டிவிட்டார்கள் இப்போது எங்கு போவது என்று தெரியாமல் நிற்கிறோம். அதற்கு கிருஷ்ணா ,கவலைபடாதே என் வீட்டு தோட்டத்தில் நிறைய மரங்கள் உள்ளன. அதில் நீயும் உன் பெற்றோரும் தங்கிக்கொள்ளலாம் என்றான்.பிறகு கிருஷ்ணா நடந்ததை தன் பெற்றோரிடம் கூறி அனுமதியை பெற்றான். மணி, கிருஷ்ணாவிடம் விளையாடுவதை விட்டுவிட்டு தன் பிரச்சனையை கூறி வருத்தப்பட்டது. ஊரில் உள்ள மரங்களையெல்லாம் வெட்ட தொடங்கியதால் என் உறவினர்கள் வாழிடங்களை இழந்து நிற்கிறார்கள் என்றது மணி. தன் நண்பனுக்கு ஆறுதல் கூறினான்.

சில வருடங்களுக்கு பிறகு கிருஷ்ணா தன் கல்லூரி படிப்பிற்காக வெளியூர் செல்கிறான். தன் நண்பனை மீண்டும் எப்பொழுது பார்க்க போகிறோம் என்று காத்துகொண்டிருக்கிறான். விடுமுறைக்கு ஊருக்கு போகிறான் தன் தோட்டத்தில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு அவன் நண்பனையும் தேடுகிறான் காணவில்லை.தன் அப்பாவிடம் கேட்கிறான். அவர் அவனுடைய கல்லூரி படிப்பிற்காக தோட்டத்தை விற்றுவிட்டதாக கூறுகிறார். ஊர் முழுவதும் மணியை தேடுகிறான் கடைசியில் ஊரின் நடுவே மின் கம்பத்தில் பார்க்கிறான் .நடந்ததற்காக வருத்தப்படுகிறான்.

பின் கல்லூரிக்கு சென்று தன் நண்பர்களிடம் நடந்ததை கூறி இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறுகிறான். கல்லூரி விடுமுறை நாட்களில் நண்பர்களோடு தன் ஊருக்கு சென்று மரங்களை நடுகிறான்.

சில வருடங்களுக்கு பிறகு தன் கல்லூரி படிப்பை முடித்து விட்டு ஊருக்கு திரும்புகிறான். எங்கு திரும்பினாலும் பெரிய பெரிய கட்டிடங்களும்,தொழிற்சாலைகளும்,வானை தொடும் கைப்பேசி கம்பங்களும் தனக்கே அடையாளம் தெரியாத அளவுக்கு அவனுடைய ஊர் மாறியிருந்தது. அவனுடைய கண்கள் தன் நண்பனை தேடி அலைந்தது.செல்போன்கோபுரத்தில் தன் நண்பனை பார்க்கிறான். பெற்றோரும் உறவினர்களும் இழந்த நிலையில் வருத்தமாக இருந்தது மணி. நான் நட்ட மரங்கள் ஒன்று கூட இல்லையே என்ன ஆனது , எப்படி நீ உன் பெற்றோரை இழந்தாய் என்று கிருஷ்ணா மணியிடம் கேட்டான். நீ நட்ட மரங்களை எல்லாம் வெட்டிவிட்டார்கள் இப்பொழுது இந்த செல்போன் கோபுரங்களில்தான் வாழ்கிறோம். இங்கு வந்த பிறகுதான் எங்கள் இனம் சிறிது சிறிதாக அழிய ஆரம்பித்தது. இப்படியே சென்றால் எங்கள் இனமே இல்லாமல் போய்விடும். மரங்கள் மனிதர்களுக்கும் தேவை என்பதை உணராத வரை இதற்கு முடிவு காண முடியாது.

கிருஷ்ணா தன் சொந்த ஊருக்கு மாவட்ட ஆட்சி தலைவராக வருகிறான். தொழிற்சாலையிலிருந்து வரும் புகையும் கைப்பேசி கம்பத்திலிருந்து வரும் கதிரியக்கமும் ஊரை மாசுபடுத்துகிறது என்று எண்ணி அவற்றை அகற்றி ஊர் முழுவதும் மரங்களை நட உத்தரவிட்டான். ஊர் முழுவதும் பசுமையாக மாறத்தொடங்கியது நிறைய பறவைகள் வர ஆரம்பித்தது. இதையறிந்த ஜனாதிபதி கிருஷ்ணாவை சந்திக்க அழைக்கிறார். ஜனாதிபதி அவரை பாராட்டுகிறார். அப்பொழுது அவர் நீங்கள் மரம் வெட்டுவதை தடுக்க என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார். மக்களிடையே மரம் வளர்ப்பதின்அவசியத்தை உணர்த்த கூட்டங்கள் கூட்டினோம். ஆனால் அவை பயனற்று போகவே, குடி தண்ணீரும் மின்சாரமும் கொடுப்பதை தடை செய்வதாக அறிவித்தவுடன் மக்கள் அனைவரும் மனமுவந்து மரங்களை நட முன்வந்தார்கள். இப்படித்தான் எங்கள் ஊரில் இந்த மறுமலர்ச்சி ஏற்பட்டது. மரங்கள் பறவைகளுக்கு மட்டுமல்ல எல்லா உயிரினங்களுக்கும் உயிர் வாழ மிக முக்கியம்.செல்போன் இல்லாமல் வாழ முடியும் ஆனால் மரங்கள் இல்லாமல் நாம் வாழ முடியாது.கிருஷ்ணாவும் மணியும் உலக மக்கள் அனைவருக்கும் ஓர் உதாரணமாக திகழ்ந்தார்கள்.நாமும் அவர்களை போல வாழ்வோம் என்று ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு கூறுகிறார்.

Click to Read an Interactive version of this story here